Thursday, July 27, 2006

நன்றிகளும் வாழ்த்துக்களும்

நன்றிகளும் வாழ்த்துக்களும்

வாக்களித்த பெருமக்களுக்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

அதிக வோட்டுக்களை வாங்கிக் குமித்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

நான் மூன்று பதிவுகளை போட்டிக்கு சமர்ப்பித்திருந்தாலும் எனக்கு அதில் பிடித்த ஒன்றை கீழே கொடுத்திருக்கிறேன்.(நானெல்லாம் இப்படி மீள்பதிவு போட்டாத்தான் உண்டு).

மரணம் பற்றி சிந்திக்கும் சமயமெல்லாம்

மரணம் நிரந்தரப் பிரிவென்று வருந்துபவரே
நிரந்தரமில்லா உலகை பிரிவதெப்படி நிரந்தரமாகும்?

என்று கேட்கத் தோன்றுகிறது

மரணம் என்பது
சோகமா? நம்மவர்களைப் பிரிப்பதால் வருத்தமா? இல்லை புரியாததைப் பற்றிய பயமா?

இல்லை அப்பா மரணம்

ஆராய்ந்து உணர்ந்தறிய முடியாத ஞானம்
ஞானமனைத்தும் விளக்க இயலாத கேள்வி
அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் விளங்காத புதிர்
பயத்தால் உயிர் வழிநடத்தும் கர்மா

கர்மாவென்று சொல்வது சரியா?

உயிர்கள் இயங்குவது கூட்டை காக்கத்தானே
உயிரைப் பேணத்தானே உலகின் தொழிலெல்லாம்
மரணம்தானே அதிகபட்ச தண்டனை இவ்வுலகில்
ஆக இயக்கமனைத்திற்கும் அடிப்படை மரணமே!!!

ஒப்புக் கொள்ள முடியவில்லையே. ம்ம் ஹா மாட்டிக் கொண்டீர்.. தோற்றுவித்தலுக்கு மரணம் எப்படி காரணியாக்குவீர்?

கேளப்பா

தன்னெச்சம் இவ்வுலகில் மிச்சம் வைக்கவே
தோற்றுவிக்கிறான் இதிலடக்கம் கலையும் குழந்தையும்
அவரவரெச்சமே மிச்சமிருப்பின் தோற்றுவித்தல் எதற்காக
உயிருக்கு மரணமில்லையெனில் பிறப்பு எதற்காக

தோற்றுவிக்கிறது, வழி நடத்துகிறது மரணம் கடவுளா?

மரணமே முதல் பயம் மண்ணுயிர்கெல்லாம்
இறையை உணர்ந்தது அப்பயத்தை ஆராய்ந்துதான்
இறை நானேயென்றிருப்பானே மரணம் நீக்கினால்
இறையைத் தேடியிருப்பானா மரணத்தை மனிதனறிந்தால்?

Monday, July 17, 2006

ஐம்பது பதிவுகள்

என்னடா எல்லாம் ஆயிரத்தை நோக்கி போயிட்டு இருக்காங்க ஐம்பதுக்காக ஒரு பதிவான்னு எல்லாம் நீங்க நினைக்கலாம். அதாவது ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு பக்கம்ன்னு வைச்சுகிட்டா ஐம்பது பக்கங்கள் நான் தமிழ்ல எழுதியிருக்கேன் என்று நினைக்கும் பொழுது நிஜமாலுமே எனக்கு சந்தோசமா இருந்தது அதனால்தான் சரி நாம சந்தோசத்தை வெளிப்படுத்திடுவோம்ன்னு ஒரு பதிவு. அப்படியே நான் எழுதுனது இது இதை பத்தி அப்படின்னு ஒரு ஓஸி விளம்பரமும் பண்ணிக்கலாமே.

முதலில்

நன்றி கூறும் படலம்

தமிழ்மணத்துக்கு என் சிரம் தாழ்த்தி நன்றி கூறிக் கொள்கிறேன். தமிழ்மணம் இல்லையென்றால் கண்டிப்பாக தமிழர் பலருக்குள் இயற்க்கையாகவே உள்ள தமிழார்வம் போல் என்னுள்ளும் இருக்கும் தமிழார்வத்திற்கு தீனி போட்டிருக்க முடியாது. நானெல்லாம் தமிழில் எழுதிக் கொண்டிருக்க மாட்டேன். அதற்காக தமிழ் மணத்துக்கு நன்றிகள்.

நான் எழுதற எழுத்து எல்லாம் சும்மா எழுத வேண்டுமே என்ற ஆர்வத்திற்காக எழுதுவது. மத்தபடி கதை எழுதணும் கவிதை எழுதணும் அப்படின்னெல்லாம் நினைத்ததே இல்லை. எதோ கிறுக்கறதுக்கு கவிதை, கதை என்று தமிழ் மணத்திலிருப்பவர்கள் கோபித்து கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் நான் எழுதறதுக்கு பின்னூட்டங்களை எதிர்பார்ப்பதில்லை(எதோ சுமாரா இருந்தாலாவது எதிர்பார்க்கலாம்). இருந்தாலும் பின்னூட்டம் வர வேண்டும் என்ற ஆசை உண்டு. இப்படி இருக்கும் பொழுது என் பதிவுகளையும் படித்துவிட்டு எதோ சுமாரா எழுதறான் இவனை ஊக்குவிப்போம் என்ற எண்ணத்தில் பின்னூட்டம் இட்ட அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

என் சக வலைப் பதிவாளர்கள் அனைவருக்கும். இன்ஸ்பிரேசன் என்பது இரு வகைகளில் வரும். எப்படி எழுதறான் பாரு இதை மாதிரி நாமும் எழுதலாம் என்று, இவனெல்லாம் எழுதறான் நானும் எழுதலாம் என்று. இங்குள்ள வலைப் பதிவாளர்கள் அனைவருமே எனக்கு முதல் வகையில் இன்ஸ்பிரேசன் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள். நான் பலருக்கு பின்னூட்டம் இட வேண்டும் என்று நினைத்து இட்டதில்லை அவர்கள் அனைவருக்கும் சொல்லிக் கொள்வது நீங்க எல்லாரும் அருமையாக எழுதுகிறீகள் என்று உங்கள் அனைவரின் எழுத்துக்களும்தான் என்னுடைய பூஸ்ட்.

தவறுகளுக்கு வருந்துதல்

எனக்கு வாழ்க்கையில பெரிய கொளுகை எல்லாம் கிடையாது. எந்த மனிதனுக்கும் மனதாலும் துன்பம் தராதே என்ற ஒன்று மட்டுமே கொள்கை. அதையும் சரியா பின்பற்றுவது இல்லை. சில இடக் கூடாத பின்னூட்டங்கள். சில சொல்ல கூடாத கருத்துக்கள் என்னிடம் இருந்து வந்திருக்கிறது அது அனைத்தும் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

என்னுடைய பதிவுகளில் எனக்கு பிடித்தது

விளம்பரம் என்றெல்லாம் நினைக்காதீங்க ஐம்பது பதிவு எழுதீட்டமேன்னு ஒரு சந்தோசத்துள முன்னாடி எழுதினது எல்லாம் எடுத்துப் பார்த்தேன். அதுல பிடித்திருந்தது கீழே.

1. உதட்டோரப் சிரிப்பழகு

எதோ என் கிறுக்கல்களிலேயே ஒரு சுமாரான கிறுக்கல் என்பது என் எண்ணம்.

2. யோசித்து பார்க்கிறேன் காதல் என்னவென்று

முதல் கிறுக்கல் அதனால்


3. எண்ணமாறு

ஏனோ தெரியல இந்த ஆறு விளையாட்டில் நான் எழுதுனது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

நன்றிகள் அனைவருக்கும்.

வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்.

Thursday, July 13, 2006

வலைப் பதிவாளர்களுக்கு சில குரல்(றள்)கள்

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலான் ஆகப் பெறின்

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்