சமீபத்தில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய ஒரு தொலைக்காட்சி ஒலி ஒளிப் படம் இது. வழக்கம் போல பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற கிறிஸ்துவ மதச் சார்புள்ள நாடுகளில் வெளியிடப்பட்டு இந்தியாவில் தடை செய்யப் பட்டுள்ளது.
1980களில் ஜெருசலம் நகரில் பல கட்டிடங்கள் கட்டப்படுகின்றன, அப்போது அந்த ஊரில் ஆங்காங்கே இருக்கும் பல பழமையான சமாதிகள் இடிக்கப் படுகின்றன. தீவிர மத நம்பிக்கைகள் கொண்ட நாடான இஸ்ரேலில் இது போன்ற சமாதிகள் இடிக்கப்படுவதால் முணுமுணுப்புகள் எழுந்தன.
ஆகவே அந்த பழங்காலத்து சமாதிகளை காக்க அந்த சமாதிகளில் உள்ள பொருட்களை இஸ்ரேல் அருங்காட்சியகத்துறை பல குடோன்களில் அடைத்து வைக்க ஆரம்பித்தது.
இங்கு சமாதி என்ற சொல் சரியானது அல்ல என்றே சொல்ல வேண்டும். இவை நம் ஊரில் இருக்கும் சமாதிகள் போன்றவை அல்ல.
ஒரு குகை அதில் வைக்கப்பட்டிருக்கும் 1x1 அடி நீளமுள்ள சில பெட்டிகள். இவைதான் அந்த காலத்து யூத சமாதிகள்.
இந்த யூத சமாதிகள் வைக்கும் பழக்கம் மிகக் குறைவான காலமே இருந்து வந்தது. சுமார் 100 ஆண்டுகள் மட்டுமே இந்த பழக்கம் நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது. அதற்கு பின்னால் படையெடுப்புகள் போன்ற காரணங்களால் இவை முற்றிலுமாக குறைந்து போய் விட்டது.
யூத மத பழக்கத்தின் படி ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிப்பட்ட சமாதி குகைகள் இருந்து வந்தன. ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் இறந்தவுடன் இறந்தவரின் உடலை அந்த குகைக்குள் சென்று வைப்பார்கள். ஒரு வருடம் கழித்து மீண்டும் வந்து அந்த உடலில் மிஞ்சி இருக்கும் எலும்புகளை ஒரு பெட்டியில் வைத்து அந்த குகையில் ஒரு பகுதியில் வைத்து விடுவார்கள். இது தான் அந்தக் காலத்து யூத சமாதிகள்.
குடும்பத்தினர் யாருடைய பெட்டியில் யாருடைய எலும்புகள் இருக்கிறது என்பதை அடையாளம் கண்டு கொள்ள இறந்தவரின் பெயரை பெட்டியில் எழுதி வைப்பார்கள்.
இந்த பெட்டிகளை Ossuary(ஆஸூவரிகள்) என்று சொல்லுவார்கள். இந்த ஆஸீவரிகளில் உள்ள பெயர்கள் இஸ்ரேல் அருங்காட்சியகத்துறை தொகுத்து வைத்துள்ளது.
இந்த ஒளி ஒலிப் படத்தை எடுத்த இயக்குனர் அந்த தொகுத்து வைக்கப்பட்டுள்ள பகுதிகளை படிக்கும் சமயம் அதில் உள்ள ஒரு பெயர் அவரை ஈர்த்தது. அந்தப் பெயர்தான்
யேசுவா பார் யகோசே
ஹீப்ரூவில் இருக்கும் இந்தப் பெயரை ஆங்கிலப்படுத்தினால் நமக்குக் கிடைப்பது
Jesus son of Joseph
இந்தப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது 1980களில்.
இங்கு சற்று வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டி இருக்கிறது.
புனித மேரிக்கும் ஜோசப் என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட வேளையில், புனித மேரி பரிசுத்த ஆவியால் தனக்கு குழந்தை உண்டானதாக அறிவித்தார். ஜோசப் அவரை திருமணம் செய்து கொண்டு கிறிஸ்துவையும் தத்தெடுத்துக் கொண்டார். ஆகவே கிறிஸ்து அவர்களின் வளர்ப்புத் தந்தை பெயர் ஜோசப். மேரிக்கும், ஜோசப்புக்கும் வேறு குழந்தைகளும் உண்டு. அதாவது கிறிஸ்து அவர்களுக்கு மரியாம்னே, சலோமி என்ற இரண்டு தங்கைகளும் ஜோசப், ஜேம்ஸ், சைமன், ஜுடாத் என்ற நான்கு தம்பிகளும் உண்டு.
மேலும் கிறிஸ்து அவர்கள் சிலுவையில் அறைந்து இறந்த உடன் அவரை ஒரு குகையில் சென்று வைத்ததாகவும் அந்த குகைக்கு மூன்று நாளுக்கு பின்னால் சென்ற மேரி மதலான்(மேரி மங்க்டாலின்) அங்கு கிறிஸ்துவின் உடலைக் காணாமல் தேட கிறிஸ்து உயிர்தெழுந்து மேரி மதலான் அம்மையாருக்கு காட்சியளித்தார்.
இவை அனைத்தும் பைபிளின் பழைய ஏற்பாடுகளில் இருந்து நமக்குத் தெரிய வரும் தகவல்.
இந்த சரித்திர உண்மைகளைப் ஒருவர் அறிந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் அவருக்கு, ஜோசப் மகன் இயேசுவின் சமாதி என்ற செய்தியைக் கேட்டவுடன், இந்த சமாதி இயேசு கிறிஸ்துவுடையதாக இருக்கலாமோ என்ற கேள்வி தோன்றி இருக்க வேண்டுமல்லவா? ஏன் இந்தக் கேள்வி இந்த சமாதி கண்டுபிடிக்கப்பட்ட 1980களில் எழவில்லை?
ஏனெனில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சமாதி இவ்வளவு சாதாரணமாக கண்டுபிடிக்கப் பட்டிருக்க முடியாது என்று மக்கள் நினைத்ததால் இருக்கலாம்.
இல்லை இயேசு என்ற பெயரும், ஜோசப் என்ற பெயரும் பழங்காலத்து ஜெருசலத்தில் மிக அதிகமாக புழக்கத்தில் இருந்த பெயர். அந்த காலத்து ஜெருசலம் தெருவில் நின்று இயேசு என்று கூப்பிட்டால் 10% சதவீதம் பேர் திரும்பிப் பார்ப்பார்கள். ஆகவே இது அவருடைய சமாதியாக இருக்க முடியாது என்று தீர்மானித்து விட்டார்கள்.
ஆனால் இந்த ஒளி ஒலிப் படத்தில் இயக்குனரால் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவர் இதனை மேலும் ஆராய்ச்சி செய்ய முடிவு செய்தார்.
முதலில் இஸ்ரேல் அருங்காட்சியகத்துறைக்கு சென்று அந்த சமாதியில் உள்ள மற்ற பெயர்களை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார்.
அங்கு கிடைத்த அடுத்தப் பெயர்
மரியா
அதாவது புனித மேரி அல்லது மரியம்.
இயேசு, ஜோசப், மேரி இந்த மூன்று பெயரும் ஒரு குடும்ப சமாதிகள் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் கிடைக்கிறது. நமக்குத் தெரிந்த இயேசுவை விடுத்து வேறு ஒரு இயேசு கிறிஸ்து, மேரி, ஜோசப் என்ற மூவர் இருந்திருக்க முடியுமா? இந்தக் கேள்விகளுடன் மேலும் அதே சமாதியில் உள்ள வேறு பெயர்கள் ஆராய ஆரம்பிக்கிறார். அப்போது அவருக்கு கிடைத்த இன்னொரு பெயர்
யோசே
இந்தப் பெயரையும் நாம் பைபிளின் பழைய ஏற்பாடுகளில் காண்கிறோம். இயேசுவின் தம்பி ஜேம்ஸை குறிப்பிடும் ஒரிடத்தில் இந்தப் பெயரை குறிப்பிடுகிறார்கள்.
சரி இப்போது ஜெருசலம் நகருக்கு செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த நகரில் சுமார் ஒரு 60000 பேர் வசிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் அனைவரையும் ஒரிடத்தில் கூப்பிட்டு வைத்து இயேசு என்பவர்கள் எல்லோரும் எழுந்து நில்லுங்கள் என்றால் 6000 பேர் எழுந்து நிற்பார்கள். ஜோசப் என்று கூப்பிட்டால் 12000 பேர் எழுந்து நிற்பார்கள் மேரி என்று கூப்பிட்டால் 15000 பேர் எழுந்து நிற்பார்கள்.
இப்போது இயேசு என்று கூப்பிடுகிறோம் 6000 பேர் எழுந்து நிற்பார்கள், இயேசு ஜோசப்பின் மகன் என்று கூப்பிட்டால் அதில் பாதி பேர் 3000 பேர் இருக்கிறார்கள் என்று வைப்போம். இந்த இயேசு என்பவருக்கு மேரி என்ற பெயரில் ஒரே இடத்தில் சமாதி அமைக்கும் அளவுக்கு நெருக்கமான சொந்தக்காரர்கள் இருப்பவர்கள் எழுந்து நில்லுங்கள் என்றால் எத்தனை பேர் மிஞ்சுவார்கள். அதோடு யோசே என்ற பெயரையும் எடுத்துக் கொண்டால் எத்தனை பேர் இருப்பார்கள்?
இந்த சமாதியில் கிடைத்த மற்றொரு பெயர் தான்
மாரா மரியம்னே
இந்தப் பெயர் இது வரை இஸ்ரேலில் கிடைத்துள்ள ஆஸ்சுவரிகள் அனைத்திலும் ஒரே இடத்தில் தான் கிடைத்துள்ளது.
இங்கு மாரா என்பது இன்றும் பூசாரிகளுக்கு கொடுக்கப் பட்டு வரும் பெயர். இந்தப் பெயரை ஆங்கிலப்படுத்தினால் கிடைப்பது
Master Mariamne
இந்தப் பெயர் பைபிளின் எந்த இடத்திலும் உபயோகப் படுத்தப்படவில்லை. ஆனால் இந்தப் பெயரை வேறு ஒரு மிக முக்கியமான இடத்தில் காண முடிகிறது. 1930களில் கிடைத்த Dead sea scrollsகளில் தான் அது.
அதில் மேரி மதலான் அம்மையாரை இதே பட்டத்துடன் மாரா மரியம்னே என்று பல இடங்களில் குறிப்பிடுகிறார்கள்.
அதே பெயர் இந்த சமாதியிலும் இருக்கிறது.
இது ஒரு மிக அரிய விஷயம். யோசித்துப் பாருங்கள் கிறிஸ்து, புனித மேரி, ஜோசப், யோசே என்ற அனைத்தும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுடன் அந்த குடும்பத்தைச் சேராத ஆனால் கிறிஸ்துவின் மிக நெருக்கமான சீடர்களில் ஒருவரான மதலான் அம்மையாரின் பெயரும் குறிப்பிடப்படுகிறது.
இது மிக மிக அரிதான ஒரு விஷயம் என்று குறிப்பிடுகிறார்கள் இயக்குனர்.
மேலும் இந்த சமாதிகள் மேல் கட்டிடங்கள் கட்டியுள்ளப் பட்டதாக நினைத்திருந்தார் இந்த் ஒளி ஒலிப் படத்தின் இயக்குனர். ஆனால் இந்த சமாதியைத் தேடிச் சென்ற இடத்தில் அவருக்கு அந்த சமாதிக்குள்ளே செல்லவும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அந்த சமாதியில் அவர் இன்று அமெரிக்க டாலரில் உள்ள முக்கோண வடிவத்தை அந்த சமாதியின் நுழைவாயிலில் கண்டு பிடிக்கிறார்.
இந்த முக்கோணம் knights templar என்பவர்களுடன் சம்பந்தப்பட்ட ஒரு குறியீடு ஆகும். Davinci code படித்தவர்களுக்கு knights templar என்பவர்களுக்கும் வாடிக நகருக்கு இருந்த பகை போன்றவையும், வாடிகன் நகரம் மூலமாக இவர்கள் மிகப் பெரிய பணக்காரர்கள் ஆனதும், பின் வாடிகனாலேயே படுகொலை செய்யப்பட்டதும் தெரியவரும்.
ஆனால் அந்த சமாதியை மேலும் பார்வையிட முடியாமல் இஸ்ரேல் அருங்காட்சியகத்துறை இவர்களை வெளியேறச் சொல்லி விட்டது.
இந்தப் படத்தின் இயக்குனர் இந்த ஒளி ஒலிப் படத்தை முடிக்கும் முன் இந்த சமாதி இயேசு கிறிஸ்துவுடையது இல்லையென்றால், இயேசு கிறிஸ்து வாழ்ந்த அதே சமயத்தில் ஜோசப் என்ற தகப்பனார் பெயர் கொண்ட, இரண்டு மேரிக்கள் அவருடைய வாழ்க்கையில் கொண்ட, யோசே என்ற நெருங்கிய சொந்தக்காரர் கொண்ட இயேசு என்ற மற்றொருவர் வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லி முடிக்கிறார்.
Wednesday, March 28, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
\\இவை அனைத்தும் பைபிளின் பழைய ஏற்பாடுகளில் இருந்து நமக்குத் தெரிய வரும் தகவல்.
//
உங்கள் கட்டுரை அநேக புதிய தகவல்களைக் கொடுக்கிறது. தகவல்கள் 'எல்லாம்' உண்மை தானா? நன்றி!
பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு இரண்டும் சேர்ந்தது தான் பைபிள். இயேசு கிறிஸ்து பிறக்குமுன்பே இயேசுவைப் பற்றி சொல்லப்பட்ட தகவல்களை பழைய ஏற்பாடு எடுத்துரைக்கிறது.
இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்குப் பின் நடந்த தகவல்களை புதிய ஏற்பாடில் நாம் வாசிக்க முடிகிறது.. :)))
Post a Comment