Friday, February 02, 2007

ஹாரிப் பாட்டர் வெளியாகும் நாள்

ஹாரிப் பாட்டர் ஜூலை மாதம் 21 நாள் வெளியாகும் என்று எழுத்தாளர் ரௌலிங் அவர்களின் வலைத் தளத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

ஹாரி பாட்டரை நான் படிக்க ஆரம்பித்தது நான்காவது புத்தகம் வெளியான பின்புதான். முதன் முதலில் படித்தது இந்த வரிசையில் வெளியான இரண்டாவது புத்தகமான சேம்பர் ஆப் சீக்ரெட்ஸ் புத்தகத்தை தான். மும்பை சென்று திரும்பும் சமயம் சேம்பர் ஆப் சீக்ரெட்ஸ் புத்தகத்தை மும்பையில் வாங்கி, சென்னை வந்து சேருவதற்குள் முழு புத்தகத்தையும் படித்து முடித்து, திருச்சி சென்றடைந்த உடனேயே தெப்பக்குளம் சென்று மீதி மூன்று புத்தகங்களையும் வாங்கி வந்து 3 நாட்கள் உறக்கம், உணவு மறந்து படித்து முடித்தேன்.

அடுத்த இரண்டு புத்தகங்களையும் வெளியான அதே நாளில் வாங்கி படித்திருக்கிறேன். ஐந்தாவது, ஆறாவது புத்தகத்தை எதிர்பார்த்து காத்திருந்தது போல ஏழாவது புத்தகத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை என்பது உண்மை.

இதற்கு காரணம் ஹாரிப் பாட்டர் சலித்துப் போனது அல்ல. ஏழாவது புத்தகத்துக்கு அடுத்து வேறு ஹாரிப் பாட்டர் புத்தகம் எழுதப் போவதில்லை என்று ரௌலிங் அறிவித்தது தான் காரணம்.

6 வருடக் கேள்விகளுக்கு விடை கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், இந்த கண்ணாடி அணிந்த மின்னல் வடிவ தழும்பு கொண்ட ஹாரிப் பாட்டர் புத்தகங்கள் இனி மேல் வெளி வராது என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை.

இந்தப் புத்தகத்திற்கு வெளி வந்த பின் எதனை நான் அதிகமாக மிஸ் செய்வேன் என்று தெரியவில்லை. அடிக்க அடிக்க நினைவுக்கு வந்தவைகளை கீழே கொடுத்துள்ளேன்

ஹெர்மயோனி ரானுக்கும், ஹாரிக்கும் சொல்லும் கண்டிப்பு கலந்த அறிவுரைகளை.

ரான் அடிக்கும் ஜோக்குகள், பயம் கலந்த வீரம்.

ஸ்நேப் ஹாரியைப் பார்த்து அடிக்கும் வெறுப்பு கலந்த கமெண்டுகள்.

நெவிலியின் வீரம், தன்னம்பிக்கைக் குறைவு.

லூனா லவ்குட்டின் ஏகாந்தம்

புத்தகத்தை கையில் எடுத்ததில் இருந்து படித்து முடிக்கும் வரை கீழே வைக்க விடாத மர்மங்கள்.

இவ்வளவு மர்மங்கள் நிறைந்து இருந்தாலும் நகைச்சுவை இழையோடும் எழுத்தால் உதட்டில் இருக்கும் புன்னகை.

இவை எல்லாவற்றையும் விட ரௌலிங்கின் தலைக்குள் 1990ல் ஒரு ரயில் பயணத்தில் உருவான இந்தக் கதை எப்படி இருக்கப் போகிறது எப்படி முடியப் போகிறது என்பதைக் குறித்த சிந்தனைகள்.

ஜூலை 21ஐ எதிர்பார்த்துக் காத்திருந்தாலும் மனதின் ஒரு ஓரத்தில் ஜூலை 21 வர பல யுகங்கள் ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

0 comments: