Friday, June 30, 2006

வலைப் பதிவாளர்களுக்கு இன்னும் சில குரல்(றள்)கள்

நான் ஒரு வலைப் பதிவாளருக்கு வெளியிட்ட பின்னூட்டம் இன்னும் வெளியாகவில்லை. காலையில் வெளியிட்டது. அது வெளியானாலும் வெளியாகாவிட்டாலும் கவலையில்லை அவருக்காக சில குரல்(றள்)கள்.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்

நடு நிலைமை தவறியதால் நமக்கு பலன் கிடைக்கும் என்றாலும் நாம் நடு நிலைமை வழுவக் கூடாது.(விளக்கம் சரி என்றுதான் நினைக்கிறேன் தெரிந்தவர்கள் கூறவும்).

இனிய உளவாக இன்னாத கூறல்
கனி-இருப்பக் காய் கவர்ந்தற்று

Wednesday, June 28, 2006

வலைப் பதிவாளர்களுக்கு ஒரு குரல்(றள்)

இன்னா செய்தாரே ஒருத்தர் அவர்நாண
நன்னயம் செயது விடல்

பொய்யா மொழிப் புலவர் திருவள்ளுவர் தெய்வப் புலவர் என்று அறியப் படுவதில் ஆச்சர்யம் இல்லை. காலத்தை வென்று விட்டது குறள் என்பதில் சிறிதும் ஐயப்பாடில்லை. இன்று நம் வலைப் பதிவாளர்களுக்காக கூட குறளை விட்டுச் சென்றிருக்கிறாரே.

ஒரு விவாததில் எனக்கு பிடித்த வலை பதிவாளர் ஒருவர் என்னிடம் ஒருவருடைய பதிவுகளுக்கு எப்படி வேண்டுமானாலும் பதில் சொல்லலாம் என்று எனக்கு பதிலளித்துள்ளார். அவருக்கு இந்த இடுகை சமர்ப்பணம்.

என் ஆன்மீக குரு வேதாத்திரி மகரிஷி அவர்களின் சில சிந்தனைகளோடு இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்...
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்...
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்...

பிறருக்கு மனதாலும் துன்பம் நினையாதே.

குறைகாணும் பழக்கத்தை விட்டுவிட்டு நல்ல குணங்களையே பாராட்டும் பண்பு கொள்ள வேண்டும்.

துன்பம் போக்கும் தூயநெறியே அன்பாம். அறமாம் அறிவின் உயர்வாகும்.

உனக்கும் நல்லதாய், ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும் செய்வதும் நித்தியக் கடன்.

உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில் உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே.

ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள், உள்ளுணர்வு பெற்றோர்கள், உடல்நலமும், மனவளமும், உயர்அறிவும் பெறுவார்கள்.

Saturday, June 24, 2006

ரசித்த நாவல் பொன்னியின் செல்வன் - 2

நான் ரசித்த மேலும் சில வர்ணணைகள்

"கிழக்கே வான் முகட்டில் சூரியன் உதயமாகி கொண்டிருந்தான். அங்கே கடலை உருக்கி விட்ட தங்கக் கடலாகித் தகதகவென்று திகழ்ந்தது. உதய குமாரி தங்க பட்டாடை புனைந்து கொண்டு ஜொலித்தாள். அவனுக்கு எதிரே படகு போய்க் கொண்டிருந்த திசையில் ஒரு மரகதத் தீவு நீல்ப் பட்டாடை போர்த்துக் கொண்டு விளங்கியது. வலப் புறத்தில் அதே மாதிரி இன்னொரு பச்சை வருண பூமிப் பிரதேசம் காணப்பட்டது. அது நான் புறமும் கடல் சூழ்ந்த தீவா அல்லது நீண்டு பரந்து வியாப்பித்துள்ள பூமிப் பிரதேசமா என்று தெரியவில்லை. இரண்டு மரகதப் பிரதேசங்களுக்கும் ஊடே பார்த்தால் தூரத்தில் அத்தகைய இன்னும் பச்சைத் தீவுகள் பச்சை நிறத்தின் பல வேறு கலவைகளுக்கு உதாரணமாக தோன்றிக் கொண்டிருந்தன. படகிலிருந்தபடியே நாலு புறமும் சுற்றிப் பார்த்தால், வானவில்லின் ஏழு வர்ணங்களும் அதன் ஏழாயிரம் வகைக் கலவை நிறங்களும் திகழ்ந்தன. மொத்தத்தில் அந்த காட்சி கண்ணெதிரே காணும் உண்மைக் காட்சியாகவே தோன்றவில்லை. ஒவியக் கலையில் தேர்ந்த அமரக் கலைஞன் ஒருவன் "இதோ சொர்க்கலோகம் எப்படியிருக்கும் என்று காட்டுகிறேன்!" என்று சபதம் பூண்டு தீட்டிய வர்ணச் சித்திர அற்புதம் போலவே தோன்றியது."

தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டுவதற்கு ராஜராஜனுக்கு எப்படி தோன்றியிருக்க வேண்டும் என்று கூறிப்பிடும் இடமும் சொல்லியாக வேண்டும்.

"அக்கா! ஒரு செய்தி! இலங்கை சிறிய ராஜ்ஜியமாக இருந்தாலும் அந்த ராஜ்ஜியத்தை முற்காலத்தில் ஆண்ட மன்னர்கள் மகாபுருஷர்கள்; பெரிய உள்ளங்களைப் படைத்தவர்கள். அவர்கள் பெரிய பெரிய திட்டங்களைப் போட்டு பெரிய பெரிய காரியங்களைச் சாதித்தார்கள். செங்கல்களைக் கொண்டு மலை போன்ற மேக மண்டலத்தை அளாவிய புத்த ஸ்தூபங்களை நிர்மாணித்தார்கள். ஆயிரம், இரண்டாயிரம் அறைகள் உள்ல மண்டபங்களை எழுப்பினார்கள். புத்த பகவான் எவ்வளவு பெரியவர் என்பதை பார்த்தவுடன் தெரிந்து கொள்ளும் படியாக,அதோ அந்த தென்னை மர உயரமுள்ள புத்தர் சிலைகளை அமைத்தார்கள். அக்கா! இதோ நமக்கு முன்னாலிருக்கும் நந்தி விக்ரகத்தைப் பார். எவ்வளவு சின்னஞ் சிறியதாய் இருக்கிறது! அடியும் முடியும் காண முடியாத மகாதேவரின் வாகனமாகிய நந்தி இவ்வளவு சிறியதாகவா இருக்கும்? கைலாசத்தில் பரமசிவனுடைய பரிவாரங்களோ பூதகணங்கள். அந்த பூத கணங்கள் அடிக்கடி வந்து தொந்தரவு செய்யாமல் கைலாசத்தின் வாசலில் நின்று காவல் புரிகிறவர் நந்திதேவர். அவர் இவ்வள்வு சிறிய உருவத்துடன் இருந்தால் பூத கணங்களை எப்படி தடுத்து நிறுத்த முடியும்? அதோ பார் அக்கா! இதோ என் கண் முன்னால் இதோ இந்த நந்தி வளர்கிறது. வளர்ந்து வளர்ந்து வளர்ந்து பெரியதாகிறது.பிரம்மாண்ட வடிவம் பெற்று இம்மண்டபத்தின் மேற்கூரையை முட்டுகிறது. மேற்கூறை இப்பொழுது போய்விட்டது. நந்தி பகவான் வானமளாவி நிற்கிறார். பூத கணங்கள் வருகிறார்கள்! நந்தி பகவானைப் பார்த்துப் பயபக்தியுடன் நின்று சிவனை தரிசிக்க அனுமதி கேட்கிறார்கள். நந்தி பகவான் அவ்வளவு பெரியவராயிருந்தால் சிவபெருமான் வீற்றிருக்கும் ஆலயம் எப்படியிருக்க வேண்டும்? தட்சிண மேரு என்று அழைக்கும்படியாக வானை அளாவிய கோபுரம் அமைக்க வேண்டாமா? அதற்கு தக்கபடி பிரகாரங்கள அமைய வேண்டாமா?"

பொன்னியின் செல்வர் தன் அக்காவிடம் சொல்லுவார், "வந்தியத்தேவன் செய்த தந்திர மந்திரங்களையும், கை கொண்ட சூழ்ச்சி வித்தைகளையும் நினைக்க நினைக்க எனக்கு ஆச்சர்யமளிக்கிறது". பொன்னியின் செல்வர் மட்டும் அல்ல இந்த புத்தகத்தைப் படிக்கும் அனைவருக்குமே வந்தியத்தேவனின் தந்திரங்களும், வித்தைகளும் ஆனந்தத்தையும் வியப்பையும் அளிக்கும்.

இந்த நாவலின் மூலம் பண்டைக்கால சோழர்களின் வரலாறு, தமிழ் மக்களின் வாழ்க்கை என்று பல தகவல்கள் அறியக் கிடைக்கின்றன.

இந்த நாவலில் மற்றொரு சிறப்பம்சம் அந்த காலகட்டத்தில் மக்கள் மத நம்பிக்கைகள், வழக்கில் இருந்த மதங்களை நமக்கு காட்டியிருப்பது. அன்றும் மக்கள் மதத்தின் பெயரால் பிரிந்தே கிடந்தார்கள் என்பதை நாவல் முழுவதும் வரும் சைவ - வைணவ சண்டைகள் மூலம் நமக்கு காண்பிக்கிறார். "அரியும் சிவனும் ஒண்ணு அதை அறியாதவர் வாயில் மண்ணு" போன்ற வசனங்கள் ஆங்காங்கே காணலாம். இன்றும் அது போல "கிறிஸ்துவும், முகமது நபிகளும், கிருஷ்ணரும் ஒண்ணு அதை அறியாதவர் வாயில் மண்ணு" என்று சொல்ல ஒருவர் இருப்பின் நன்றாகத்தான் இருக்கும்.

கதைக் கலன் அரசியல் சார்ந்தது என்பதால் சஸ்பென்ஸ், விறுவிறுப்புக்கு குறைச்சலே இல்லை இந்த நாவலில். இந்த நாவல் முதன் முதலாக தொடர் கதையாக வந்த சமயம் அந்தத் தொடரைப் படித்துக் கொண்டிருந்தவர்கள் கதை தெரிந்து கொள்ளும் ஆவலை எப்படி அடக்கி கொண்டிருப்பார்கள் என்று நினைத்து கொள்கிறேன் இப்பொழுது.

வந்தியத்தேவன், நந்தினி, பூங்குழலி, ஆழ்வார்க்கடியன் நம்பி போன்ற பாத்திரங்கள் தமிழ் உள்ளவரை வாழ்ந்து வரும் என்பதில் துளி கூட சந்தேகம் இல்லை.

இந்த நாவலில் நாவல் படித்து முடித்த பின்னரும் நமக்கு சில விசயங்கள் தெளிவாக்காமல் விட்டிருப்பதன் மூலம் சரித்திரத்தின் குழப்பமான அந்த சம்பவம் எப்படி நடந்திருக்கும் என்பதை நம் கற்பனைக்கே விடுகிறார் கதாசிரியர்.

ஒரு சிறிய கல்வெட்டுச் செய்தி சோழ நாட்டில் பாண்டிய நாட்டு ஆபத்துதிவகளால் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது என்று அந்த செயதியை ஒரு காவியமாக தருவதற்கு ஒரு ஜீனியஸால்தான் முடியும்.

நான் எங்கோ படித்த ஞாபகம் யாரோ ஒருவர் கல்கி அவர்களின் உடலில் வந்தியத்தேவனின் ஆவி புகுந்து அவரை இந்த நாவல் எழுத வைத்ததாக கூறியிருந்தார்கள். அவர் அப்படிக் கூறக் காரணம் அந்தக் கால கட்ட நிகழ்வுகளை நாம் நேரிலேயே காண்பது போல ஒரு எண்ணம் நமக்கு நாவல் படிக்க படிக்க உண்டாவதுதான். எனக்கு ஆவி என்பதில் நம்பிக்கைகள் எல்லாம் இல்லை. இருப்பினும் எனக்கு அவர் சொன்னதைப் படித்து இருக்குமோ என்று தோன்ற வைத்தது நாவலாசிரியருக்கு கிடைத்த வெற்றி.

Tuesday, June 20, 2006

பொன்னியின் செல்வன்

முஸ்லீம் ஒருவருக்கு ஹஜ் பயணம் எப்படி வாழ்க்கையில் முக்கியமானதோ, ஹிந்துக்களுக்கு காசி, ராமேஸ்வரம் செல்வது எவ்வளவு முக்கியமானதோ அந்த அளவு முக்கியமானது, தமிழ் மொழி ஈடுபாடு கொண்டுள்ளவர் பொன்னியின் செல்வனில் வந்தயத்தேவனுடன் பயணிப்பது.

"ஆதி அந்தமில்லாத கால் வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பயணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம்."

என்று ஆரம்பிக்கும் கல்கி அவர்கள் நம்மை எழுத்துலகின் அற்புதமான பயணத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

வந்தியத்தேவன் கதாப்பாத்திர படைப்பிற்காக மட்டுமே படைப்புலகின் அனைத்து பரிசுகளும் கல்கி அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். வந்தியத்தேவனைப் போல் ஒரு வீரமான, விவேகமான, நகைச்சுவையான, காதல் ரசனை கொண்ட கதாப்பாத்திரம் இன்று வரை இலக்கிய உலகில் படைக்கப்படவில்லை என்பது என் கருத்து. வந்தியத்தேவனை விட வீரமான கதாப்பாத்திரங்களைக் காணலாம், விவேகமான கதாபாத்திரங்களைக் காணலாம் ஆனால் எல்லாக் குணங்களும் தன்னுள் சரி விகிதத்தில் கொண்ட பாத்திரங்களை காணவே இயலாது.

வந்தியத்தேவனுக்கடுத்து நந்தினியின் கதாப்பாத்திரத்தையும் மிக அற்புதமாக அமைத்திருப்பார் கல்கி அவர்கள். பெண் நினைத்தால் எப்படி ஒரு சாம்ராஜ்யத்தையே நிலைகுலையச் செய்யலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கினாலும் என்னால் நந்தினியின் பாத்திரத்தை வெறுக்கவே இயலவில்லை புத்தகம் படித்த பலரும் என் போலவே எண்ணியிருப்பார்கள் என்றே எண்ணுகிறேன். ஒரு பச்சாதாபம் மட்டுமே கடைசி வரை நந்தினியின் மேல் வரச் செய்தது கல்கி அவர்களின் கதாபாத்திரம் வடிவமைக்கும் திறனுக்கு மிக சிறந்த சான்று.

குந்தவை, ஆழ்வார்க்கடியன் நம்பி, பூங்குழலி போன்ற கதாபாத்திரங்கள் அனைத்துமே வடிவமைக்கப்பட்ட விதத்தில் நாம் ஒரு அறிவுஜீவியின் வேலைத் திறனைக் காணலாம்.

பாத்திரப் படைப்பைப் போலவே வர்ணணைகளும் மிக அற்புதமாக அமைக்கப் பட்டிருக்கும்.

நான் ரசித்த சில வர்ணணைகளை கீழே கொடுத்திருக்கிறேன்.

"நந்தினி பொன் வர்ணமேனியாள்; குந்தவை செந்தாமரை நிறத்தாள். நந்தினியின் பொன்முகம் பூரணச் சந்திரனைப்போல் வட்ட வடிவமாயிருந்தது; குந்தவையின் திருமுகம் கைதேர்ந்த சிற்பிகள் வார்த்த சிலை வடிவைப் போல் சிறிது நீள வாட்டமாயிருந்தது. நந்தினியின் செவ்வரியோடிய கருநிறக் கண்கள் இறகு விரித்த தேன் வண்டுகளைப்போல் அகன்று இருந்தன; குந்தவையின் கரு நீல வர்ணக் கண்கள் நீலோத் பலத்தின் இதழைப்போல் காதளவு நீண்டு பொலிந்தன. நந்தினியின் மூக்கு தட்டையாக வழுவழுவென்று தங்தத்தால் செய்ததுபோல் திகழ்ந்தது; குந்தவையின் மூக்கு சிறிது நீண்டு பன்னீர்ப்பூவின் மொட்டுப் போல் இருந்தது. நந்தினியின் சிறிது தடித்த இதழ்கள் அமுதம் ததும்பும் பவழச் செம்பைப்போல் தோன்றியது.குந்தவையின் மெல்லிய இதழ்களோ தேன் பிலிற்றும் மாதுளை மொட்டென திகழ்ந்தது."

குந்தவை தன் காதலை வந்தயத்தேவனிடம் தெரிவித்து அவன் அபாயகரமான காரியங்களுக்கு செல்லும் சமயம் கவனமாக இருக்க சொல்கிறாள் அதற்கு வந்தியத்தேவன்.

"தேவி! அப்படி ஒன்றும் எனக்கு நேராது. நான் இன்று அமுதுண்டு அமரனாகி விட்டேனே! எனக்கு இனி மரணம் இல்லை! கன இருள் சூழ்ந்த வனாந்தரங்களில் காற்றும் மழையும் கடுகிப் பெய்து நான் திசை தெரியாமல் தடுமாறும் சமயங்களில் தாங்கள் அந்த காட்டு மத்தியில் உள்ள வீட்டில் பலகணிக்கு அருகில் விளக்கேற்றி வைத்துக் கொண்டு எனக்காக காத்திருப்பீர்கள். அந்த நினைவு எனக்கு தைரியம் அளித்து காற்று, மழை கனாந்தரங்களிலிருந்து தப்புவதற்கு துணை செய்யும்.அலை கடலின் நடுவில் மரக்கலத்தில் ஏறி நாளும் வாரமும் மாதமும் கணக்கு மறந்து திக்குத் தெரியாமல் மதி மயங்கி கதி கலங்கி நிற்கும் பொழுது, ஸப்தரிஷி மண்டலத்தின் அடியில் என்றும் நிலைத்தி நின்று சுடர் விட்டு வழி காட்டும் துருவ நட்சத்திரமாகத் தாங்கள் ஒளி வீசுவீர்கள். நான் திசை அறிந்து என் மரக் கலத்தை திருப்பிக் கொண்டு வருவேன். கடற்கரை ஒரத்து பாறைகளில் மாமலைகள் போன்ற பேரலைகள் தாக்கிக் கடல் கொந்தளித்துக் கொண்டிருக்கும் இரவு நேரங்களில் கலங்கரை விளக்கிலிருந்து வரும் உய்ர் காக்கும் ஒளியாக தாங்கள் பிரகாசிப்பீர்கள்.அந்தப் பிரகாசத்தைக் கொண்டு என் படகு பாறையில் மோதாமல் கரையில் கொண்டு வந்து சேர்ப்பேன். புல்லும் பூண்டும் முளைக்காத அகண்டமான பாலைவனப் பிரதேசத்தில் வடவைக் கனல் எனக் கொளுத்தும் வெய்யிலில் அனல் பிழம்பெனச் சுட்டுப் பொசுக்கும் மணலில் நான் தாகத்தால் நா உலர்ந்து வியர்வைக் கால்கள் வறண்டு தவித்துத் தத்தளிக்கும் நேரங்களில் தென்னை மரமும் தேன் கதலிகளும் சூழ்ந்த ஜீவ நதி ஊற்றாக தாங்கள் எனக்கு உதவுவீர்கள் தேவி!இந்தப் விரிந்து பரந்த உலகத்தில் நான் எங்கே போனாலும் எத்தனை கஷ்டங்களுக்கு உட்பட்டாலும் ஒரு நாள் கட்டாயம் திரும்பி வருவேன். திரும்பி வந்து தங்களைக் கரம் பிடித்து மணந்து கொள்வேன். இந்த மனோரதம் நிறைவேறும் வரை எமன் என்னை நெருங்க மாட்டான், அமுதுண்டு அமரனாக இருப்பேன்."

தொடரும்