முஸ்லீம் ஒருவருக்கு ஹஜ் பயணம் எப்படி வாழ்க்கையில் முக்கியமானதோ, ஹிந்துக்களுக்கு காசி, ராமேஸ்வரம் செல்வது எவ்வளவு முக்கியமானதோ அந்த அளவு முக்கியமானது, தமிழ் மொழி ஈடுபாடு கொண்டுள்ளவர் பொன்னியின் செல்வனில் வந்தயத்தேவனுடன் பயணிப்பது.
"ஆதி அந்தமில்லாத கால் வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி நம்முடன் சிறிது நேரம் பயணம் செய்யுமாறு நேயர்களை அழைக்கிறோம்."
என்று ஆரம்பிக்கும் கல்கி அவர்கள் நம்மை எழுத்துலகின் அற்புதமான பயணத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
வந்தியத்தேவன் கதாப்பாத்திர படைப்பிற்காக மட்டுமே படைப்புலகின் அனைத்து பரிசுகளும் கல்கி அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். வந்தியத்தேவனைப் போல் ஒரு வீரமான, விவேகமான, நகைச்சுவையான, காதல் ரசனை கொண்ட கதாப்பாத்திரம் இன்று வரை இலக்கிய உலகில் படைக்கப்படவில்லை என்பது என் கருத்து. வந்தியத்தேவனை விட வீரமான கதாப்பாத்திரங்களைக் காணலாம், விவேகமான கதாபாத்திரங்களைக் காணலாம் ஆனால் எல்லாக் குணங்களும் தன்னுள் சரி விகிதத்தில் கொண்ட பாத்திரங்களை காணவே இயலாது.
வந்தியத்தேவனுக்கடுத்து நந்தினியின் கதாப்பாத்திரத்தையும் மிக அற்புதமாக அமைத்திருப்பார் கல்கி அவர்கள். பெண் நினைத்தால் எப்படி ஒரு சாம்ராஜ்யத்தையே நிலைகுலையச் செய்யலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கினாலும் என்னால் நந்தினியின் பாத்திரத்தை வெறுக்கவே இயலவில்லை புத்தகம் படித்த பலரும் என் போலவே எண்ணியிருப்பார்கள் என்றே எண்ணுகிறேன். ஒரு பச்சாதாபம் மட்டுமே கடைசி வரை நந்தினியின் மேல் வரச் செய்தது கல்கி அவர்களின் கதாபாத்திரம் வடிவமைக்கும் திறனுக்கு மிக சிறந்த சான்று.
குந்தவை, ஆழ்வார்க்கடியன் நம்பி, பூங்குழலி போன்ற கதாபாத்திரங்கள் அனைத்துமே வடிவமைக்கப்பட்ட விதத்தில் நாம் ஒரு அறிவுஜீவியின் வேலைத் திறனைக் காணலாம்.
பாத்திரப் படைப்பைப் போலவே வர்ணணைகளும் மிக அற்புதமாக அமைக்கப் பட்டிருக்கும்.
நான் ரசித்த சில வர்ணணைகளை கீழே கொடுத்திருக்கிறேன்.
"நந்தினி பொன் வர்ணமேனியாள்; குந்தவை செந்தாமரை நிறத்தாள். நந்தினியின் பொன்முகம் பூரணச் சந்திரனைப்போல் வட்ட வடிவமாயிருந்தது; குந்தவையின் திருமுகம் கைதேர்ந்த சிற்பிகள் வார்த்த சிலை வடிவைப் போல் சிறிது நீள வாட்டமாயிருந்தது. நந்தினியின் செவ்வரியோடிய கருநிறக் கண்கள் இறகு விரித்த தேன் வண்டுகளைப்போல் அகன்று இருந்தன; குந்தவையின் கரு நீல வர்ணக் கண்கள் நீலோத் பலத்தின் இதழைப்போல் காதளவு நீண்டு பொலிந்தன. நந்தினியின் மூக்கு தட்டையாக வழுவழுவென்று தங்தத்தால் செய்ததுபோல் திகழ்ந்தது; குந்தவையின் மூக்கு சிறிது நீண்டு பன்னீர்ப்பூவின் மொட்டுப் போல் இருந்தது. நந்தினியின் சிறிது தடித்த இதழ்கள் அமுதம் ததும்பும் பவழச் செம்பைப்போல் தோன்றியது.குந்தவையின் மெல்லிய இதழ்களோ தேன் பிலிற்றும் மாதுளை மொட்டென திகழ்ந்தது."
குந்தவை தன் காதலை வந்தயத்தேவனிடம் தெரிவித்து அவன் அபாயகரமான காரியங்களுக்கு செல்லும் சமயம் கவனமாக இருக்க சொல்கிறாள் அதற்கு வந்தியத்தேவன்.
"தேவி! அப்படி ஒன்றும் எனக்கு நேராது. நான் இன்று அமுதுண்டு அமரனாகி விட்டேனே! எனக்கு இனி மரணம் இல்லை! கன இருள் சூழ்ந்த வனாந்தரங்களில் காற்றும் மழையும் கடுகிப் பெய்து நான் திசை தெரியாமல் தடுமாறும் சமயங்களில் தாங்கள் அந்த காட்டு மத்தியில் உள்ள வீட்டில் பலகணிக்கு அருகில் விளக்கேற்றி வைத்துக் கொண்டு எனக்காக காத்திருப்பீர்கள். அந்த நினைவு எனக்கு தைரியம் அளித்து காற்று, மழை கனாந்தரங்களிலிருந்து தப்புவதற்கு துணை செய்யும்.அலை கடலின் நடுவில் மரக்கலத்தில் ஏறி நாளும் வாரமும் மாதமும் கணக்கு மறந்து திக்குத் தெரியாமல் மதி மயங்கி கதி கலங்கி நிற்கும் பொழுது, ஸப்தரிஷி மண்டலத்தின் அடியில் என்றும் நிலைத்தி நின்று சுடர் விட்டு வழி காட்டும் துருவ நட்சத்திரமாகத் தாங்கள் ஒளி வீசுவீர்கள். நான் திசை அறிந்து என் மரக் கலத்தை திருப்பிக் கொண்டு வருவேன். கடற்கரை ஒரத்து பாறைகளில் மாமலைகள் போன்ற பேரலைகள் தாக்கிக் கடல் கொந்தளித்துக் கொண்டிருக்கும் இரவு நேரங்களில் கலங்கரை விளக்கிலிருந்து வரும் உய்ர் காக்கும் ஒளியாக தாங்கள் பிரகாசிப்பீர்கள்.அந்தப் பிரகாசத்தைக் கொண்டு என் படகு பாறையில் மோதாமல் கரையில் கொண்டு வந்து சேர்ப்பேன். புல்லும் பூண்டும் முளைக்காத அகண்டமான பாலைவனப் பிரதேசத்தில் வடவைக் கனல் எனக் கொளுத்தும் வெய்யிலில் அனல் பிழம்பெனச் சுட்டுப் பொசுக்கும் மணலில் நான் தாகத்தால் நா உலர்ந்து வியர்வைக் கால்கள் வறண்டு தவித்துத் தத்தளிக்கும் நேரங்களில் தென்னை மரமும் தேன் கதலிகளும் சூழ்ந்த ஜீவ நதி ஊற்றாக தாங்கள் எனக்கு உதவுவீர்கள் தேவி!இந்தப் விரிந்து பரந்த உலகத்தில் நான் எங்கே போனாலும் எத்தனை கஷ்டங்களுக்கு உட்பட்டாலும் ஒரு நாள் கட்டாயம் திரும்பி வருவேன். திரும்பி வந்து தங்களைக் கரம் பிடித்து மணந்து கொள்வேன். இந்த மனோரதம் நிறைவேறும் வரை எமன் என்னை நெருங்க மாட்டான், அமுதுண்டு அமரனாக இருப்பேன்."
தொடரும்
Tuesday, June 20, 2006
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment