நான் ரசித்த மேலும் சில வர்ணணைகள்
"கிழக்கே வான் முகட்டில் சூரியன் உதயமாகி கொண்டிருந்தான். அங்கே கடலை உருக்கி விட்ட தங்கக் கடலாகித் தகதகவென்று திகழ்ந்தது. உதய குமாரி தங்க பட்டாடை புனைந்து கொண்டு ஜொலித்தாள். அவனுக்கு எதிரே படகு போய்க் கொண்டிருந்த திசையில் ஒரு மரகதத் தீவு நீல்ப் பட்டாடை போர்த்துக் கொண்டு விளங்கியது. வலப் புறத்தில் அதே மாதிரி இன்னொரு பச்சை வருண பூமிப் பிரதேசம் காணப்பட்டது. அது நான் புறமும் கடல் சூழ்ந்த தீவா அல்லது நீண்டு பரந்து வியாப்பித்துள்ள பூமிப் பிரதேசமா என்று தெரியவில்லை. இரண்டு மரகதப் பிரதேசங்களுக்கும் ஊடே பார்த்தால் தூரத்தில் அத்தகைய இன்னும் பச்சைத் தீவுகள் பச்சை நிறத்தின் பல வேறு கலவைகளுக்கு உதாரணமாக தோன்றிக் கொண்டிருந்தன. படகிலிருந்தபடியே நாலு புறமும் சுற்றிப் பார்த்தால், வானவில்லின் ஏழு வர்ணங்களும் அதன் ஏழாயிரம் வகைக் கலவை நிறங்களும் திகழ்ந்தன. மொத்தத்தில் அந்த காட்சி கண்ணெதிரே காணும் உண்மைக் காட்சியாகவே தோன்றவில்லை. ஒவியக் கலையில் தேர்ந்த அமரக் கலைஞன் ஒருவன் "இதோ சொர்க்கலோகம் எப்படியிருக்கும் என்று காட்டுகிறேன்!" என்று சபதம் பூண்டு தீட்டிய வர்ணச் சித்திர அற்புதம் போலவே தோன்றியது."
தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டுவதற்கு ராஜராஜனுக்கு எப்படி தோன்றியிருக்க வேண்டும் என்று கூறிப்பிடும் இடமும் சொல்லியாக வேண்டும்.
"அக்கா! ஒரு செய்தி! இலங்கை சிறிய ராஜ்ஜியமாக இருந்தாலும் அந்த ராஜ்ஜியத்தை முற்காலத்தில் ஆண்ட மன்னர்கள் மகாபுருஷர்கள்; பெரிய உள்ளங்களைப் படைத்தவர்கள். அவர்கள் பெரிய பெரிய திட்டங்களைப் போட்டு பெரிய பெரிய காரியங்களைச் சாதித்தார்கள். செங்கல்களைக் கொண்டு மலை போன்ற மேக மண்டலத்தை அளாவிய புத்த ஸ்தூபங்களை நிர்மாணித்தார்கள். ஆயிரம், இரண்டாயிரம் அறைகள் உள்ல மண்டபங்களை எழுப்பினார்கள். புத்த பகவான் எவ்வளவு பெரியவர் என்பதை பார்த்தவுடன் தெரிந்து கொள்ளும் படியாக,அதோ அந்த தென்னை மர உயரமுள்ள புத்தர் சிலைகளை அமைத்தார்கள். அக்கா! இதோ நமக்கு முன்னாலிருக்கும் நந்தி விக்ரகத்தைப் பார். எவ்வளவு சின்னஞ் சிறியதாய் இருக்கிறது! அடியும் முடியும் காண முடியாத மகாதேவரின் வாகனமாகிய நந்தி இவ்வளவு சிறியதாகவா இருக்கும்? கைலாசத்தில் பரமசிவனுடைய பரிவாரங்களோ பூதகணங்கள். அந்த பூத கணங்கள் அடிக்கடி வந்து தொந்தரவு செய்யாமல் கைலாசத்தின் வாசலில் நின்று காவல் புரிகிறவர் நந்திதேவர். அவர் இவ்வள்வு சிறிய உருவத்துடன் இருந்தால் பூத கணங்களை எப்படி தடுத்து நிறுத்த முடியும்? அதோ பார் அக்கா! இதோ என் கண் முன்னால் இதோ இந்த நந்தி வளர்கிறது. வளர்ந்து வளர்ந்து வளர்ந்து பெரியதாகிறது.பிரம்மாண்ட வடிவம் பெற்று இம்மண்டபத்தின் மேற்கூரையை முட்டுகிறது. மேற்கூறை இப்பொழுது போய்விட்டது. நந்தி பகவான் வானமளாவி நிற்கிறார். பூத கணங்கள் வருகிறார்கள்! நந்தி பகவானைப் பார்த்துப் பயபக்தியுடன் நின்று சிவனை தரிசிக்க அனுமதி கேட்கிறார்கள். நந்தி பகவான் அவ்வளவு பெரியவராயிருந்தால் சிவபெருமான் வீற்றிருக்கும் ஆலயம் எப்படியிருக்க வேண்டும்? தட்சிண மேரு என்று அழைக்கும்படியாக வானை அளாவிய கோபுரம் அமைக்க வேண்டாமா? அதற்கு தக்கபடி பிரகாரங்கள அமைய வேண்டாமா?"
பொன்னியின் செல்வர் தன் அக்காவிடம் சொல்லுவார், "வந்தியத்தேவன் செய்த தந்திர மந்திரங்களையும், கை கொண்ட சூழ்ச்சி வித்தைகளையும் நினைக்க நினைக்க எனக்கு ஆச்சர்யமளிக்கிறது". பொன்னியின் செல்வர் மட்டும் அல்ல இந்த புத்தகத்தைப் படிக்கும் அனைவருக்குமே வந்தியத்தேவனின் தந்திரங்களும், வித்தைகளும் ஆனந்தத்தையும் வியப்பையும் அளிக்கும்.
இந்த நாவலின் மூலம் பண்டைக்கால சோழர்களின் வரலாறு, தமிழ் மக்களின் வாழ்க்கை என்று பல தகவல்கள் அறியக் கிடைக்கின்றன.
இந்த நாவலில் மற்றொரு சிறப்பம்சம் அந்த காலகட்டத்தில் மக்கள் மத நம்பிக்கைகள், வழக்கில் இருந்த மதங்களை நமக்கு காட்டியிருப்பது. அன்றும் மக்கள் மதத்தின் பெயரால் பிரிந்தே கிடந்தார்கள் என்பதை நாவல் முழுவதும் வரும் சைவ - வைணவ சண்டைகள் மூலம் நமக்கு காண்பிக்கிறார். "அரியும் சிவனும் ஒண்ணு அதை அறியாதவர் வாயில் மண்ணு" போன்ற வசனங்கள் ஆங்காங்கே காணலாம். இன்றும் அது போல "கிறிஸ்துவும், முகமது நபிகளும், கிருஷ்ணரும் ஒண்ணு அதை அறியாதவர் வாயில் மண்ணு" என்று சொல்ல ஒருவர் இருப்பின் நன்றாகத்தான் இருக்கும்.
கதைக் கலன் அரசியல் சார்ந்தது என்பதால் சஸ்பென்ஸ், விறுவிறுப்புக்கு குறைச்சலே இல்லை இந்த நாவலில். இந்த நாவல் முதன் முதலாக தொடர் கதையாக வந்த சமயம் அந்தத் தொடரைப் படித்துக் கொண்டிருந்தவர்கள் கதை தெரிந்து கொள்ளும் ஆவலை எப்படி அடக்கி கொண்டிருப்பார்கள் என்று நினைத்து கொள்கிறேன் இப்பொழுது.
வந்தியத்தேவன், நந்தினி, பூங்குழலி, ஆழ்வார்க்கடியன் நம்பி போன்ற பாத்திரங்கள் தமிழ் உள்ளவரை வாழ்ந்து வரும் என்பதில் துளி கூட சந்தேகம் இல்லை.
இந்த நாவலில் நாவல் படித்து முடித்த பின்னரும் நமக்கு சில விசயங்கள் தெளிவாக்காமல் விட்டிருப்பதன் மூலம் சரித்திரத்தின் குழப்பமான அந்த சம்பவம் எப்படி நடந்திருக்கும் என்பதை நம் கற்பனைக்கே விடுகிறார் கதாசிரியர்.
ஒரு சிறிய கல்வெட்டுச் செய்தி சோழ நாட்டில் பாண்டிய நாட்டு ஆபத்துதிவகளால் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது என்று அந்த செயதியை ஒரு காவியமாக தருவதற்கு ஒரு ஜீனியஸால்தான் முடியும்.
நான் எங்கோ படித்த ஞாபகம் யாரோ ஒருவர் கல்கி அவர்களின் உடலில் வந்தியத்தேவனின் ஆவி புகுந்து அவரை இந்த நாவல் எழுத வைத்ததாக கூறியிருந்தார்கள். அவர் அப்படிக் கூறக் காரணம் அந்தக் கால கட்ட நிகழ்வுகளை நாம் நேரிலேயே காண்பது போல ஒரு எண்ணம் நமக்கு நாவல் படிக்க படிக்க உண்டாவதுதான். எனக்கு ஆவி என்பதில் நம்பிக்கைகள் எல்லாம் இல்லை. இருப்பினும் எனக்கு அவர் சொன்னதைப் படித்து இருக்குமோ என்று தோன்ற வைத்தது நாவலாசிரியருக்கு கிடைத்த வெற்றி.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ஆமாம் உண்மைதான் இல்லையென்றால் அவர் அடிக்கடி அந்த வந்தியதேவனை பாராட்டி அவன் தான் கதாநாயகன் போல காட்டிவிட்டார் அவர் 1925ல் நாட்டார் எழுதிய கள்ளர் சரித்திரத்தை படித்தும் அதில் உள்ள சில கருத்துகளையும் சேர்த்துள்ளார்.
சரி ஏன் அக்கையாருக்கு திருமணம் நடைபெறவில்லையா? என்ன காரணம் படித்தீர்களா
என்னார் ஐயா அக்கையார் என்று யாரைக் கேட்கிறீர்கள் குந்தவை தேவி அவர்களையா?
அக்கா குந்தவை தான். ராஜராஜ சோழன் படம் பார்த்திருக்கிறீர்களா? ஏடு தந்தானடி தில்லையிலே...
நன்றி குப்புசாமி சார். கல்கி அவர்கள் குந்தவை தேவி அவர்களுக்கும் வந்தியத்தேவனுக்கும் திருமணம் ஆகி விட்டதாக ஒரு கல் வெட்டுச் செய்தி கூறுவதாக முடித்திருக்கிறாரே?
Post a Comment