Sunday, January 21, 2007

Pursuit of happyness, Cinderalla man

கடந்த வார இறுதியில் இந்த இரு படங்களையும் காணும் வாய்ப்பு கிடைத்தது. வறுமையில் உழலும் கதாநாயகர்கள் எப்படி வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள் என்ற சாதாரணக் கதை தான். ஆனால் இரு படத்துடனும் என்னை ஒன்றிப் போய் ரசிக்க வைத்தது இரு விஷயங்கள்.

1. இரண்டுமே உண்மைக் கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.
2. சிறப்பான நடிப்பு மற்றும் இயக்குர்கள் உண்மைக் கதைகளை திறமையாக கையாண்ட விதம்.

கிரிஷ் கார்டனர், ஜேம்ஸ் பிராடோக் ஆகிய இருவரும் 50 ஆண்டுகள் தள்ளி வாழ்ந்திருந்தாலும் அவர்கள் வாழ்க்கையில் சில ஒற்றுமைகளைப் பார்க்கலாம்.

கார்டனர் ஒரு திறமையான சேல்ஸ்மேன், தன்னுடைய வாழ்க்கையின் சேமிப்பு எல்லாவற்றையும் ஒரு நவீன இயந்திரத்தை வாங்கி விற்பதற்காக முதலீடு செய்கிறான். ஆனால் அந்த இயந்திரம் சரியாக விற்பனை ஆகாததால் வறுமை கோட்டுக்கு கீழே தள்ளப் படுகிறான்.

பிராடோக்கும் அதே போலத்தான் தான் குத்துச் சண்டைப் போட்டியில் வென்ற எல்லாப் பணத்தையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறான். ஆனால் 1933 அமெரிக்க பங்கு சந்தை வீழ்ச்சியில் எல்லாப் பணத்தையும் இழக்கிறான். ஒரு குத்துச் சண்டையில் கைகள் உடைத்துக் கொண்டு மேலும் பல போட்டிகளில் தோல்வியுற்றதால் குத்துச் சண்டை சங்கத்தில் இருந்து வெளியேற்றப் படுகிறான். வறுமை கோட்டுக்கு கீழே தள்ளப் படுகிறான்.

இருவரும் திறமைசாலிகள், இருவரும் பெரிய தவறுகள் எதுவும் செய்யவில்லை. 1933 Great Depression போது அமெரிக்காவில் இருக்கும் பலர் தங்களுடைய பணத்தை இழந்தார்கள். அதில் இருந்து மீண்டு எழுந்து வருவதற்குள் கை உடைந்து குத்துச் சண்டை சங்கத்தில் இருந்து வெளியேற்றப் பட்டது எல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தான்.

கார்டனர் நிலைக்கும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சொல்லலாம். மருத்துவத் துறைக்கு வந்த நவீனக் கருவி எல்லோரும் வாங்குவார்கள் என்று எண்ணி வாங்கிய பின் இதனை யாரும் வாங்க மாட்டார்கள் என்று தெரிந்த உடன், அதனை லாபமில்லாத விலைக்கு விற்று முதலீட்டையும் தொலைத்து அதனால் வருமானமும் இல்லாமல் இருக்கிறான்.

இருவருக்கும் தங்களுடைய குழந்தைகள் தான் உலகம். அவர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய துணியும் இருவரும் என்னென்ன செய்கிறார்கள்.

மூட்டை தூக்கி குடும்பத்திற்கு உணவு ஏற்பாடு செய்கிறான் பிராடோக். ஒரு வேளை உணவு மட்டும் அருந்தி வீட்டில் உள்ளவர்களுக்கு உணவு அளிக்கிறான்.

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் இவர்களை அலைகழிக்கிறது இருவரையும்.

வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கும் கார்டனருக்கு பங்கு வர்த்தக தரகராக முடிவெடுத்து பணிக்கு விண்ணப்பிக்கிறான். ஆனால் அந்தப் பணி அவனுக்கு கிடைக்க 6 மாத Internship செய்ய வேண்டும் என்றும், அந்த சமயத்தில் அவனுக்கு சம்பளம் கிடைக்காது என்றும், 6 மாதம் கழித்து 20 Internகளில் இருந்து ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்றும் பல நிபந்தனைகள்.

இத்தனை நிபந்தனைகள் இருந்தாலும் அவன் அந்தப் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு செல்ல ஒப்புக் கொள்கிறான். இதனை அறிந்த அவன் மனைவி அவனை விட்டு விட்டு சென்று விடுகிறாள். அந்த Internship நேர்முகத் தேர்வுக்கு செல்ல வேண்டிய நாளுக்கு முந்தைய நாள் அவனை பார்க்கிங் டிக்கெட் கட்டாததற்காக போலீஸில் பிடித்துச் செல்கிறார்கள். அடுத்த நாள் போலீஸ் ஸ்டேசனில் இருந்து நேரடியாக நேர்முகத் தேர்வுக்கு கலைந்த தலையுமாய், கிழிந்த உடையுமாய் செல்ல வேண்டிய நிலை இருப்பினும் தன் நிலையை விளக்கி அந்த தேர்ச்சி அடைகிறான்.

பிராடோக் நிலைமையும் மிக மோசமாகுகிறது. பணம் இல்லாததால் மின் இணைப்பைத் துண்டிக்கிறார்கள். அமெரிக்காவில் இருக்கும் கடும் குளிரில் மின்சார வெப்பம் இல்லை என்றால் சமாளிக்கவே முடியாது. அவனுடைய மனைவி பல இடங்களில் விறகு பொறுக்கி வெப்பமூட்டுகிறாள் ஆனால் மைனஸில் செல்லும் குளிரால் அவனுடைய குழந்தைகளுக்கு காய்ச்சல் வருகிறது.

அதனால் அவனுடைய மனைவி குழந்தைகளை உறவினர் வீட்டுக்கு அனுப்பி விடுகிறாள். வீட்டுக்கு வந்து அதனை அறிந்த பிராடோக் குத்துச் சண்டை சங்கத்திற்கு சென்று தனக்குத் தெரிந்தவர்களிடம் பிச்சை கேட்டு பணம் வாங்கி வந்து மின் இணைப்பை சரி செய்து குழந்தைகளை கூட்டி வருகிறான்.

கார்டனர் நிலைமை இன்னும் பரிதாபமாகிறது அவனை வீட்டில் இருந்து வாடகை கொடுக்காததால் வெளியேற்றுகிறார்கள். அரசாங்கம் இலவசமாக நடத்தும் விடுதியில் தினமும் வரிசையில் நின்று இடம் பிடிக்க வேண்டும். அது நிறைந்து விடும் சமயத்தில் ரயில்வே நிலையத்தில் தான் தங்க வேண்டிய நிலைமை.

தினமும் பங்கு வர்த்தக நிறுவனத்தில் காலை முதல் மாலை வரை வேலை செய்து மாலை விரைவாக கிளம்பி வந்து வரிசையில் நின்று இடம் பிடிக்க வேண்டும். இல்லை ரயில்வே நிலையத்தில் தங்க வேண்டும். இதற்கு நடுவில் வேலைக்கு நடக்கும் தேர்வுக்காக படிக்க வேண்டும் என்று மாறி மாறி வேலை செய்கிறான் கார்டனர்.

வறுமை கொடியது என்று கேள்வியுறுகிறோம் ஆனால் அந்த சொல்லாடல் வறுமையின் வலியை முழுக்க காட்டுவதே இல்லை. இருக்க இடமில்லாமல் குளிரில் நடுங்கி மழையில் வாடி வெய்யிலில் வதங்கி, உடுத்த சரியான ஆடை இல்லாமல், உண்ண உணவில்லாமல் இருப்பதன் வலி பலருக்கு புரிவதே இல்லை.

இது என்ன விரும்பி ஏற்கும் வாழ்க்கையா? இவர்களுக்கு நமக்குக் கொடுக்கப் பட்டிருப்பது போன்ற வாய்ப்புகள் கொடுக்கப் பட்டிருந்தால் இவர்கள் இப்படி இருப்பார்களா? சின்னச் சின்னத் தவறுகளுக்கு வாழ்க்கையில் இத்தனை துன்பங்களா?

இதனை விதி என்று சொல்லுவர் வஞ்சக நெஞ்சம் கொண்டவர்கள். வாழ்க்கையின் எல்லா சுகானுபவங்களையும் அனுபவித்து விட்டு, இவர்களை எளிதாக கீழே தள்ளி விட உபயோகப் படுத்தும் வார்த்தை தான் இது.

வாழ்க்கையில் வறுமைக் கோட்டுக்கு கீழே இருந்து எப்படியாவது மேலே வர மாட்டோமா என்று இவர்களுக்குள்ளும் போராட்டம் இருக்கத் தான் செய்கிறது.

சமூகம்(நான் உட்பட) என்ன சொல்கிறது. இவர்களால் தான் இந்த நாட்டிற்கே கெட்ட பெயர் என்று. சமூகத்தில் அடுத்த தட்டில் இருப்பவர்கள் போன் மார்கெட்டிங் செய்பவர்களை விபச்சாரம் செய்வதாக கூறுகிறார்கள்.

பணம் இருக்கும் அகம்பாவம் தான் இப்படி பேச வைக்கிறது பலரை.

கார்டனரை ரயில் நிலையத்தில் அவன் பிள்ளையுடன் ஓரமாக ஒதுங்கி மூலையில் இருப்பதை பார்த்திருந்தால் அதையேதான் இந்த சமூகம் சொல்லி இருக்கும்.

பிராடோக் தன் பிள்ளைகளை வீட்டுக்கு கூட்டி வருவதற்காக பிச்சை எடுப்பது போல தொப்பியை அனைவரிடமும் நீட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்திருந்தால் உடம்பு நல்லா தானே இருக்கு பிச்சை ஏன் எடுக்கணும்? இதுக்கு செத்து போயிடலாம் என்று பேசி இருக்கும் இந்த சமூகம்.

இது போன்ற மக்களுக்கு சுயமரியாதை இல்லையென்று எள்ளி நகையாடி இருக்கும் இந்த சமூகம்.

அவர்களுக்கு சுயமரியாதை குறைவுதான். பசியும், குளிரும், போராட்டங்களும் நிறைந்த அவர்கள் வாழ்க்கையில் சுயமரியாதை என்பது குறைவாகத்தான் இருக்கும்.

ஆனால் கார்டனர், பிராடோக் போன்ற மக்களும் போராளிகள் தான். இவர்களுடைய போர் யாருடைய கடவுள் பெரியவர் என்பது போல முட்டாள்தனமானது அல்ல, என் இனம் பெரியது என்பது போன்ற மூடத்தனத்தை உள்ளடக்கியது அல்ல.

இவர்களுடைய போர் தனக்கும் தன்னை சார்ந்திருப்பவர்களுக்கும் அடுத்த வேலை உணவு கிடைக்க வழி செய்ய வேண்டும், நாளை இதே நிலைமை நீடிக்கக் கூடாது என்பதால் இன்றைய சுயமரியாதை குறைச்சல்களை கண்டு கொள்ளாமல் நாளையை மட்டுமே மனதில் வைத்து முன்னேற வேண்டும் என்பது மாதிரியான போர்.

Its a war for survival to the fittest.

இது போன்று போராடிக் கொண்டிருப்பவர்கள் எப்போதுமே போராடிக் கொண்டிருப்பதில்லை. வாழ்க்கை கொடுக்கும் சின்னச் சின்னச் சந்தர்பங்களை உபயோகப் படுத்தி முன்னேறி விடுகிறார்கள்.

பிராடோக்கும் அது போலத்தான். உலகக் குத்துச் சண்டை சாம்பியன் போட்டி நடை பெறுவதற்கு முன்பு நேரத்தைக் கடத்த சில போட்டிகள் நடப்பதுண்டு. அந்த மாதிரி போட்டியில் கலந்து கொள்ள முடியாததால் ஒருவர் கடைசி நேரத்தில் வெளியேறி விட பிராடோக்கு கிடைக்கிறது ஒரு சந்தர்ப்பம்.

அந்தப் போட்டி நடக்கும் நாள் உணவருந்தாமல் வருகிறான் பிராடோக். அதனை கடைசி நேரத்தில் தான் கவனிக்கும் மேலாளர் உணவு கொடுக்க கிளவுஸ் ஆகியவை கட்டி இருப்பதால் ஸ்பூன் தேடச் செல்கிறார். உணவைக் கண்ட பிராடோக் ஸ்பூன் தேடும் அளவுக்கு பொறுமை இல்லாததால் அப்படியே தலையை உள்ளே விட்டு உண்ணும் காட்சி பரிதாபத்துக்குறியது.

அந்தப் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பிராடோக் வெற்றி பெறுகிறான்.

அங்கே கார்டனர் மாலை வேகமாக செல்ல வேண்டும் இல்லையெனில் அரசாங்க விடுதியில் இடம் கிடைக்காமல் ரயில்வே நிலையத்தில் தங்க வேண்டி இருக்கும் என்ற நிலையில் தன்னுடைய வேலையை திறம்பட செய்ய தன்னுடைய தொலைபேசியை கீழே வைக்காமலேயே பேசுவதால் மற்றவர்களை விட 8 நிமிடம் அதிகமாக வேலை செய்ய முடியும் என்பதை கண்டு கொள்கிறான்.

மேலும் தண்ணீர் அருந்த செல்லாமல் இருப்பது, அதன் மூலம் சிறுநீர் கழிக்க அவசியமில்லாமல் போவது ஆகியவற்றின் மூலம் 15 நிமிடம் மற்றவர்களை விட அதிக நேரம் வேலை செய்ய முடியும் என்றும் கண்டு கொண்டு அப்படியே வேலை செய்கிறான்.

பிராடோக் இந்த வெற்றியினால் கிடைக்கும் மேலும் ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மேலும் வெற்றிகள் பெறுகிறான். அந்த வெற்றி மூலமாக உலக சாம்பியன் பட்டத்திற்காக போட்டியில் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அப்போதைய சாம்பியன் தன்னுடன் போட்டியிட்ட இருவரை செத்துப் போகும் அளவுக்கு அடித்து வென்றவர். இதனை பிராடோகின் மனைவிக்கு தெரிவித்து அவனைப் போட்டியில் இருந்து விலகி விடச் சொல்லி வற்புறுத்திகிறார்கள்.

கார்டனரும் அவனுடைய வேலையில் பல தொல்லைகளை சந்திக்காமல் இல்லை. மேலாளர் காபி கொடுப்பதில் இருந்து, காரை சரியான இடத்தில் நிறுத்துவது முதல் கார்டனரை எடுபிடி வேலையாள் போல உபயோகப் படுத்துகிறார். இது போன்ற வேலையால் முக்கியமான ஒரு நபரை சந்திக்கும் வாய்ப்பையும் இழக்கிறார் கார்டினர்.

ஆனால் இவர்கள் போராளிகள் அத்தனைத் தடைகளையும் மீறி பிராடோக் சாம்பியன் பட்டத்தை வெல்கிறான். அப்போதைய உலகச் சாம்பியன் பிராடோக்கை நான் சந்தித்ததிலேயே மிக வீரமான நபர் என்று அறிவிக்கிறார். மேலும் இரண்டு வருடம் சாம்பியனாக இருக்கிறார் பிராடோக். இரண்டாம் உலகப் போரில் கலந்து கொள்கிறார். ஒரு ஊருக்கு தேவையான பாலத்தைக் கட்டித் தருகிறார்.

கார்டினர் அந்த 20 பேரில் முதன்மையாக வந்து வேலையில் சேருகிறார். பின்னர் தனியே பங்கு வர்த்தக நிறுவனம் ஒன்றைத் தொடங்கி இன்று பெரிய கோடீஸ்வராராக இருக்கிறார். வில் ஸ்மித் நடித்த இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.

இந்த இரு படங்களிலும் நாயகர்கள் நடிப்பு அற்புதமாக வந்திருக்கிறது. வில் ஸ்மித், ரசஸ் குரோ ஆகிய இருவரும் பிரமாதமா நடித்திருக்கிறார்கள். மேலும் ரசஸ் குரோவின் மனைவியாக வரும் ரெனி ஸ்வல்லேகர், வில் ஸ்மித் மகனாக வரும் ஜேடம் ஸ்மித்(உண்மையிலேயே வில் ஸ்மித்தின் மகன்) ஆகியோரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

வாழ்க்கையே வேறு கோணத்தில் பார்க்க வைத்த படங்கள் இவை.

0 comments: