Monday, November 06, 2006

நீமோவைக் கண்டுபிடித்தல்(finding nemo)

நேற்று டிஸ்னி சேனலில் ரொம்ப நாள் கழித்து மீண்டும் finding nemo பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

எல்லன் டீஜெனரஸ்(Ellen DeGeneres) ஒரு சிறந்த நடிகை, ஒரு நாள் டாக் ஷோ நடத்துபவர், தான் ஓரினச் சேர்க்கையாளர் என்பதை மறைக்காமல் ஓரினச் சேர்க்கயாளர்களின் உரிமைக்கு போராடி வருபவர், அமெரிக்காவில் இன்று இருக்கும் பெண்மணிகளிலேயே மிக சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட இவர் இந்தப் படத்தில் dory என்ற மீனுக்கும் குரல் கொடுத்தவர். இந்தப் படத்தின் உயிர் நாடியே dory என்று தான் நான் சொல்லுவேன். ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் எந்த அளவு ஒரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து அந்தக் கதையையே தூக்கி நிலை நிறுத்த முடியும் என்பதை இந்தப் படத்தில் டோரி கதாப்பாத்திரத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

கதை என்னவென்றால் நீமோ முட்டையாக இருக்கும் பொழுதே அவனுடைய அம்மாவையும் அவனுடைய பிற முட்டை சகோதரர் சகோதரிகளையும் ஒரு சுறாமீன் கொன்று விடுகிறது.

உடனே நீமோ வளர்ந்து அந்த சுறா மீனை பழி வாங்குகிறான். ஹலோ இப்படி எல்லாம் நினைச்சீங்கன்னா நிறைய விஜயகாந்த் படம் பார்க்கறீங்கன்னு அர்த்தம். அதை எல்லாம் மறந்துடுங்க.

இதனால் தன்னுடைய ஒரே உறவான நீமோவை அவனுடைய தந்தை ரொம்ப பாதுகாப்பு உணர்வுடன் வளர்க்கிறார். நீமோவின் ஒரு செதில் வேறு சிறியதாக போய் விடுவதால் அது வேறு நீமோவின் தந்தைக்கு கவலையாகி விடுகிறது.

பாதுகாப்பு உணர்வு அதிகமாகி நீமோவை வெளியிலேயே விடாமல் அவனை பிறரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்குகிறார்.

நீமோவின் பிடிவாதத்தால் அவனைப் பள்ளியில் சேர்க்கிறார் அவன் தந்தை. பள்ளியில் கேலிக்கு ஆளாகும் நீமோ தன்னை நிரூபிப்பதற்காக சென்று ஒருவரின் வலையில் சிக்கி கொள்கிறான். அவர் அந்த மீனை தன் தொட்டியில் வளர்ப்பதற்காக எடுத்துச் சென்று விடுகிறார்.

அங்கு நீமோவின் பள்ளி செயல்களை ஒளிந்து இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் நீமோவின் தந்தை அந்த படகை பின்பற்றி செல்லத் தொடங்குகிறார் ஆனால் படகு வேகமாக சென்று விடுகிறது.

அப்பொழுது அந்தப் பக்கம் வந்த டோரியை ஒரு படகைக் கண்டாயா என்று நீமோவின் தந்தை கேட்க ஆம் இந்தப் பக்கம் சென்றது என்னைப் பின் தொடர் என்று சொல்லி வேகமாக செல்லத் தொடங்கும் டோரி சிறிது தூரம் சென்று மெதுவாக செல்லத் தொடங்குகிறது. நீமோவின் தந்தை ஏன் மெதுவாக செல்கிறாய் என்று கேட்க நீ யார்? என்று கேட்பதில் இருந்து காமெடித் திருவிழா ஆரம்பிக்கிறது.

அப்பொழுது தான் தெரிகிறது டோரிக்கு short term memory loss என்று. கஜினியில் சூர்யாவுக்கு இருந்ததே அதே வியாதிதான். ஆனால் நம்ம சூர்யா மாதிரி சிரியஸான ஆசாமி இல்லை ஜாலியான optimistic மீன்.

அப்பொழுது டோரிக்கு அந்த படகு விட்டுச் சென்ற அடையாளப் பலகையில் இருந்த முகவரியைப் படித்து நீமோவின் தந்தைக்கு சொல்கிறது. அதை விட ஆச்சரியம் அளிக்கும் வகையில் அந்த முகவரி டோரிக்கு ரொம்ப நேரம் ஞாபகம் இருக்கிறது.

அதனால் டோரி நீமோவின் தந்தை அருகில் இருந்தால் தன்னுடைய நிலைக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணி நீமோவின் தந்தைக்கு உதவி செய்வதற்காக அவருடனே அந்த முகவரி குறிப்பிட்ட சிட்னிக்கு செல்ல ஆரம்பிக்கிறது.

முதலில் டோரியின் கூட வர விரும்பாத நீமோவின் தந்தை வேறு வழி இல்லாமல் சம்மதிக்கிறார். அங்கிருந்து நீமோவைக் கண்டுபிடிக்க செய்யும் பயணம் தான் கதை.

நடுவில் சைவமாக விரும்பும் சுறாக்கள், super cool ஆமைகள் என்று அவர்களின் பயணம் 11/2 மணி நேரம் ஒரு மாஜிக் பயணத்தில் நம்மை அழைத்துச் செல்லும்.

டோரி கதாபாத்திரம் முன்னரே குறிப்பிட்டுள்ளது போல மிகச் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கள்ளம் கபடமில்லாததால் டோரி அதன் குழந்தைத்தனம், எல்லாமே நல்லது என்று எடுத்துக் கொள்ளும் அதனுடைய பாத்திரம், மனிதன் குழந்தைப் பருவத்தை ஏன் விரும்புகிறான் ஏன் குழந்தைத்தனம் என்பது முக்கியம் என்பதை எல்லாம் நமக்கு சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது.

உதாரணமாக ஒரு திமிங்கலத்திடம் தொடர்பு கொள்ள முடியும் என்று நம்பும் டோரி அதனுடன் திமிங்கல பாஷையில் பேசுவதாக சொல்லி சிட்னி செல்வது எப்படி என்று கேட்கிறது.

அந்தத் திமிங்கலம் டோரியையும், நீமோவின் தந்தையையும் விழுங்கி விடுகிறது. நீமோவின் தந்தை டோரியை கடிந்து கொண்டு உனக்கு திமிங்கல பாஷை எல்லாம் தெரியாது என்று திட்டிக் கொண்டிருக்கும் சமயம் அந்தத் திமிங்கலம் அவர்களை சிட்னியில் இறக்கி விடுகிறது.

இது போல டோரியின் பல காட்சிகள் கள்ளம் கபடமற்ற வாழ்க்கையைப் பற்றி ஏங்க வைத்து விடுகிறது.

கடைசியாக இந்தப் படத்தை எடுத்த பிக்ஸர் நிறுவனம் பற்றி சொல்லவில்லை என்றால் இந்தப் பதிவு நிறைவு பெறாது.

Toy story, Bugs life, Monstors Inc, Incredibles, Cars இதுதான் இந்த நிறுவனம் தயாரித்துள்ள படங்கள் இவைகளைப் பார்த்திருந்தால் நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியமே இல்லை.

இதுவரை ஒரு படம் கூட பிளாப் ஆகாமல் சூப்பர் ஹிட் படங்களை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கும் நிறுவனம். உங்களுக்கு கார்ட்டூன் பிடிக்கும் என்றால் மேலே உள்ள எல்லாப் படங்களையும் கட்டாயாம் பார்த்தே ஆக வேண்டும்.

டிஸ்னி நிறுவனம் பிக்ஸாரின் ஷேர்களை ரெக்கார்ட் விலையில் வாங்கி உள்ளது. இது பிக்ஸாரை எந்த விதத்திலும் பாதிக்காமல் அதே தரத்துடன் படங்கள் வர வேண்டும் என்பது என் போன்ற சினிமா ரசிகனின் ஆசை.

6 comments:

said...

நீமோ படத்தில் எனக்கும் டோரியைத் தான் மிகவும் பிடிக்கும், அதிலும் பயங்கர சுறுசுறுப்பான டோரியின் குரல் ரொம்பவும் கவர்ந்த ஒன்று.

finding nemo பாகம் ஒன்று அளவுக்கு பாகம் இரண்டு அத்தனை அற்புதமாக இல்லை.

ant bully யும் pixar தானே? அதுவும் நன்றாகவே இருந்ததே... அத்தனை காமெடியாக இல்லை என்றாலும்..

டோரியுடன், எனக்கு நீமோவின் ஸ்கூலும் மிகப் பிடித்த ஒன்று.. நம்மளையும் அந்த ஸ்கூலில் சேர்த்துப்பாங்களா என்று ஏங்க வைத்த ஸ்கூல் அது :)

said...

finding nemo 2 என்பது பிக்ஸார் நிறுவத்தினருடையது கிடையாது. வேறு எதோ நிறுவனம் அவர்களுடைய படத்திற்கு அந்தப் பெயரை வைத்திருக்க வேண்டும் :-)). நான் இந்தப் படத்தைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை.

ant bully வார்னர் நிறுவனத்தினருடையது. மேலே சொல்லியதுடன் சேர்த்து toy story 2 மட்டுமே பிக்ஸாருடையது.

said...

//நீமோ முட்டையாக இருக்கும் பொழுதே அவனுடைய அம்மாவையும் அவனுடைய பிற முட்டை சகோதரர் சகோதரிகளையும் ஒரு சுறாமீன் கொன்று விடுகிறது.//

அது சுறா மீன் இல்லை, Barracuda எனப்படும் ஊழி மீன்.

said...

நல்ல படம், நான் திரையரங்கில் சுற்றிலும் வெள்ளையின வாண்டுகள் சூழ இந்தப்படத்தைப் பார்த்திருந்தேன்.

said...

உங்க பதிவைப் படிச்சதும் மீண்டும் படம் பார்த்த மாதிரி ஒரு எண்ணம்!

said...

நண்பர் வீட்டில் கொஞ்ச நாளுக்கு முன்னால்தான் நீமோ படம் பார்த்தேன்.

உங்க விமர்சனம் படு சூப்பர்.

எனக்கென்னமோ அந்த குட்டி மீனோட குரல்தான் ரொம்ப பிடிச்சிருந்தது.
டோரி குரலில் ஒரு செயற்கைத்தனம் இருந்தது. :)

CARS பாத்தேன். அட்டகாசமான் படம். படம் ஆரம்பிப்பதர்க்கு முன் 'one-man-band' என்று ஒரு 5 நிமிட குறும்படம் காட்டினார்கள். அடேங்கப்பா போட வைத்தது அந்த படம்.