Wednesday, April 26, 2006

மிகவும் ரசித்த தமிழ்ப் படம் - கன்னத்தில் முத்தமிட்டால்

தோழர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் மிகவும் பிடித்த தமிழ் படம் என்ன என்று பேச்சு வந்தது, உடனே என் மனதில் தோன்றிய படம் "கன்னத்தில் முத்தமிட்டால்".

தாயை காணத் துடிக்கும் குழந்தை தாயின் நாடு செல்ல, அங்கே அந்த குழந்தையின் தாய், தாய் நாடென்று தன் குழந்தை மட்டும் அல்ல, எந்த குழந்தையும் சொல்ல இயலாத நிலை உள்ளதால் அதற்காக போராடும் போராளியாக இருக்கிறாள். தன் தாய் நாடென்று தன் குழந்தையின் குழந்தைகளாவது சொல்ல வேண்டும் என்று நிகழும் போராட்டங்களை கண் முன் நிறுத்தி இருப்பார் மணிரத்னம்.

இந்தப் படத்தில் மிகவும் ரசித்த மூன்று காட்சிகள்

"விடை கொடு எங்கள் நாடே,கடல் வாசல் தெளிக்கும் வீடே, பனை மரக்காடே பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை காண்போமா?" என்று ஒலிக்கும் எம். எஸ். வி. குரலும் அந்த பாடலுக்கு படப்பதிவும் நெஞ்சில் உள்ள அனைத்து உணர்ச்சிகளையும் கசக்கி பிழிந்து கண்களில் நீரை கொணர செய்தது. "எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம், எங்கள் இளம் திங்கள் வெடிகுண்டு புகையிலே புதைத்தோம்" என்ற வரிகளில் உயிரே உருகி விட்டது போல ஒரு உணர்வு.

கதை ஒரு குழந்தையின் தேடல் என்பதால் குழந்தையும், தாயும் சந்திக்கும் காட்சி உணர்வு பூர்வமாக இருந்ததில் வியப்பில்லை. நந்திதா தாஸ் ஒரு அற்புதமான நடிகை என்பதை சந்தேகத்திற்கிடமில்லாமல் நிருபித்திருக்கும் காட்சி.

உணர்வுப் பூர்வமான படத்தில் நாயகன் நாயகி காதல் சொல்ல 15 நிமிடங்களே இருந்தாலும் "சட்டென நனைந்தது நெஞ்சம்" என்று இரண்டு நிமிடங்களில் காதலை கவிதையாக சொல்லி இருப்பார். தற்கொலை படைப் படையைச் சேர்ந்த இளைஞர் இயல்பாக பேசி கொண்டே அடுத்த கணத்தில் காரின் முன் விழும் காட்சியும் மிகச் நல்ல காட்சியே.

இந்தப் படத்தில் நடித்த அனைவருமே மிகவும் இயல்பாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சிம்ரன், மாதவன், மகாதேவன் என்று அனைவரும் இயல்பாக நடித்திருப்பார்கள். அஞ்சலி படத்திலேயே குழந்தைகளை வைத்து வேலை வாங்குவதில் தன்னை நிருபித்த மணிரத்னம் இந்தப் படத்தில் மீண்டும் கலக்கியிருக்கிறார். கீர்த்தனாவின் நடிப்பு இந்த படத்தின் பலம்.

ஒளிப்பதிவு பற்றி பாடம் சொல்லிக் கொடுக்கும் இடங்களில் இந்த படத்தை ஒளிபரப்பி சொல்லிக் கொடுக்கலாம். அற்புதம்.

இசை "விடை கொடு எங்கள் நாடே", "ஒரு தெய்வம் தந்த பூவே" போன்ற பாடல்கள் அற்புதமாக அமைத்திருக்கிறார் ரஹ்மான்.

இந்த படம் அற்புதமாக வந்திருந்தாலும் ஒரு சிறிய குறை என்னவெனில் ஒரு குழந்தையின் தேடல், இலங்கைப் போராட்டம் இரண்டையும் ஒன்றாக தந்திருப்பதால் இரண்டின் முழுத் தாக்கமும் நம்மை வந்து அடையவில்லை என்பதுதான்.

ஆனாலும் இந்தப் படம் ஒரு மைல்கல் என்பதில் சந்தேகம் இல்லை.

விடை கொடு எங்கள் நாடே
கடல்வாசல் தெளிக்கும் வீடே!
பனைமரக் காடே!
பறவைகள் கூடே!
மறுமுறை ஒருமுறை பார்ப்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும்
ஊர்வலம் போகின்றோம்!
விடை கொடு எங்கள் நாடே
கடல்வாசல் தெளிக்கும் வீடே!
பனைமரக் காடே!
பறவைகள் கூடே!
மறுமுறை ஒருமுறை பார்ப்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும்
ஊர்வலம் போகின்றோம்!

கந்தல் ஆனாலும் தாய்மடி போல் ஒருசுகம் வருமா?வருமா?
சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர்போல் சுதந்திரம் வருமா?வருமா?
கண்திறந்த தேசம் அங்கேகண்மூடும் தேசம் எங்கே?
பிரிவோம் நதிகளே
பிழைத்தால் வருகிறோம்
மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்
கண்ணீர்த் திரையில் பிறந்த மண்ணைக்
கடைசியாகப் பார்க்கின்றோம்

எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைத்தோம்
எங்கள் இளம் திங்கள் வெடிகுண்டுப் புகையிலே புதைத்தோம்
முன்னிரவில் மலரில் கிடந்தோம்
பின்னிரவில் முள்ளில் கிழிந்தோம்
கடல்நீர்ப் பறவைகாள்
இருந்தால் சந்திப்போம்
வனமே நதிகளே
வாழ்ந்தால் சந்திப்போம்
தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம்
சுமைகள் சுமந்து போகின்றோம்

விடை கொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே!
பனைமரக் காடே! பறவைகள் கூடே!
மறுமுறை ஒருமுறை பார்ப்போமா?
உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும்
ஊர்வலம் போகின்றோம்!

7 comments:

said...
This comment has been removed by a blog administrator.
said...

நல்ல படம்.

கோடனு கோடி தமிழ்ச்சகோதரர்களும் வேண்டிக்கொல்வோம்.

மாவீரர்களுக்கு வெற்றி கிட்டட்டும்.

said...

நிறைய எழுதுங்கள் நண்பரே. பார்த்த படங்களை விட படித்த விஷயங்களை பகிர்ந்து கொள்வது அனைவருக்கும் பயன் தரும்.

குப்புசாமி செல்லமுத்து

said...

நிறைய எழுதுங்கள் நண்பரே. பார்த்த படங்களை விட படித்த விஷயங்களை பகிர்ந்து கொள்வது அனைவருக்கும் பயன் தரும்.

குப்புசாமி செல்லமுத்து

said...

குப்புசாமி அவர்களே ஊக்கம் தன்தமைக்கு நன்றி

said...

இல்லை. அது எம்.எஸ்.வி தான்.

இப்படம் பற்றி நான் முன்பு நட்சத்திரக் கிழமையில் எழுதிய பதிவும் அதைத் தொடர்ந்த பின்னூட்டங்களும்.

said...

அவர்கள் இருவரின் குரல்களுமே இப்பாடலில் ஒலிக்கின்றன.